search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ள நோட்டு"

    • பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.
    • ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு போலீசார் கடந்த மாதம் 6-ந்தேதி நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? எப்படி பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    இந்த நிலையில் அவர் விருதுநகரில் பதுங்கி இருப்பதை அறிந்த அடிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு நேற்று அவரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
    • முதியவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதன் பின்னர் முதியவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் (வயது 70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுற சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் மீதும் திங்களூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் 100, 200, 500 ஆகிய போலி நோட்டுகள் கொண்ட ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகளையும், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண்கள் இருவரை பெருந்துறை சிறையிலும், பெண்கள் இருவரை கோவை சிறையிலும் அடைத்தனர். கள்ள நோட்டு தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார்.
    • விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்மூர்த்தி (வயது31). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த முருகன் மனைவி ஜோதிமணி (வயது38). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    இருவரும் கோர்ட்டுக்கு பணி நிமித்தமாக வந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜோதிமணி தன்னிடம் வெளிநாட்டு நபர் ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறுகிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனை இரட்டிப்பாக்கி தருகிறார். தன்னிடம் போதுமான அளவு பணம் இல்லாததால் உங்களிடம் பணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் என கூறி உள்ளார்.

    அதன்படி கடந்த 12-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ரெயில் மூலம் ஜோதிமணியும், விக்னேஷ்மூர்த்தியும் பெங்களூரு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி இருந்தபோது வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் அங்கு வந்தார். அப்போது விக்னேஷ்மூர்த்தி தான் கொண்டு வந்த ரூ.44,500 பணத்தை அவரிடம் கொடுத்தார். அந்த நபர் ஒரு பெட்டியில் பவுடர்களை கொட்டி அதனுடன் பணக்கட்டுகளையும் வைத்து சீல் வைத்து உங்கள் ஊருக்கு சென்றவுடன் இதை திறந்து பார்க்கவும் என கூறி உள்ளார்.

    10 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் எனவும் உறுதி அளித்தார். அதனை நம்பி விக்னேஷ்மூர்த்தி நேற்று அந்த பெட்டியை திறந்து பார்த்தார். அதில் ரூ.35 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தன்னுடன் வந்த வக்கீல் ஜோதிமணியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முறையான பதில் அளிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த 76 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் பணத்தை பெரியகுளத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் செலுத்த சென்றார். அப்போது அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என சம்மந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் சார்பில் வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அங்கு வந்து கள்ளநோட்டுகளை செலுத்த முயன்ற விக்னேஷ்மூர்த்தியை பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் விசாரணையில் நடந்த விபரங்களை அவர் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து பணம் மோசடி வழக்கில் உடந்தையாக இருந்த பெண் வக்கீல் ஜோதிமணியையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விக்னேஷ்மூர்த்தியிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என கண்டறியப்பட்டது. தன்னிடம் பேசிய வெளிநாட்டு நபர் இதுவரை தொலைபேசி மூலம் மட்டுமே தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவருடன் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் வக்கீல் ஜோதிமணி கூறினார்.

    இருந்தபோதும் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படை போலீசார் பெங்களூருவில் இவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    சம்மந்தப்பட்ட வெளிநாட்டு நபர் இதுபோன்ற வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ளநோட்டுகளை கோர்ட்டு ஊழியரே பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஐதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • புகாரின் பேரில் போலீசார் ஐதராபாத்தில் உள்ள குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மர்ம கும்பல் ஒன்று கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஐதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புகாரின் பேரில் போலீசார் ஐதராபாத்தில் உள்ள குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    கள்ள நோட்டு அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.36.35 லட்சம் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம் மற்றும் பேப்பர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளில் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போதும் மாற்றும்போதும் உஷாராக இருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இவர்களது கடையில் கடந்த 2 மாதங்களாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது கள்ளநோட்டுகளை கொடுத்து சிலர் காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் தினேஷ், மணி இருவரும் காய்கறிகள், பழங்களை வாங்க சென்றபோதுதான் இது தெரிய வந்தது. இவர்கள் மொத்த வியாபாரிகளிடம் கொடுக்கும் பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கள்ள நோட்டுகளை கண்டுபிடித்து, அவற்றை தினேஷ் மற்றும் மணியிடம் திரும்ப கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து தினேஷ், மணி இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறு கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும்போது ஒரு முறைக்கு இருமுறை நல்ல நோட்டு தானா? என்று பார்த்து வாங்குங்கள் என மொத்த வியாபாரிகள் தினேஷ், மணிக்கு அறிவுரை கூறியுள்ளனர். அடிக்கடி கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி மர்ம நபர்கள் காய்கறிகளை வாங்கிச் சென்று விடுவதால் தினேஷ் ,மணி இருவருக்கும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதையடுத்து தங்களது கடையில் கள்ள நோட்டுகளை மாற்றுவது யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க இருவரும் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில், நேற்று இரவு தினேஷ், மணியின் காய்கறி கடையில் வழக்கம்போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, கடைக்கு வந்த ஒரு முதியவர் ரூ. 670 க்கு காய்கறி, பழங்களை வாங்கிவிட்டு 3 புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். இதில் 670 ரூபாய் போக மீதி தொகையையும், ஒரு 500 ரூபாய் நோட்டுக்கு சில்லரையையும் கேட்டார். இந்த ரூபாய் நோட்டுகளை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் வீராசாமி உரிமையாளர் தினேஷிடம் முதியவர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை காண்பித்தார். அப்போது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து முதியவரை பிடித்து வைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தினேஷ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அண்ணாமலை என்பது தெரியவந்தது. 64 வயதான இவர் பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான அவர் கொடுத்த தகவலின் பேரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் இவருக்கு 62 வயதாகிறது. சுப்பிரமணியனின் வீட்டிலிருந்து ஒரு கட்டிங் மெஷின், ரூபாய் நோட்டுகளை எண்ணும் கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்பவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் எத்தனை ஆண்டுகளாக இதே போல் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டனர் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதைதொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளில் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போதும் மாற்றும்போதும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • மர்ம நபர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
    • போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்கள் துணிக்கடைகள், பழக்கடைகள், டீக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். அந்த இடங்களை குறி வைத்து சில மர்ம கும்பல் 500 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தியூர் பகுதிகயில் உள்ள கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு நேற்று பலர் வந்து பணம் கொடுத்து பொட்ரோல் போட்டு சென்றனர். இதை பயன்படுத்தி ஒருவர் ரூ.200 கொடுத்து பொட்ரோல் போட்டு கொண்டு சென்றார். இதையடுத்து அந்த நோட்டை ஆய்வு செய்த போது அது கள்ள நோட்டு என தெரிய வந்தது. அந்த கள்ள நோட்டு யார் கொடுத்தது என தெரிய வில்லை.

    இதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து மர்ம கும்பல் பெட்ரோல் போட்டு சென்றது தெரிய வந்தது. இப்படி அடிக்கடி வந்து மர்ம கும்பல் கள்ள நோட்டுகள் கொடுத்து ஏமாற்றி வருவதை அறிந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி அந்த நோட்டுகளை அப்புறப்படுத்த அறிவுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    அந்தியூர் பகுதியில் சில மர்ம நபர்கள் அடிக்கடி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு கடைகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மேலும் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வருகின்ற 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வார்கள்.

    இதனால் பணப்புழக்கம் அந்தியூர் பகுதியில்இருக்கும். இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணத்தை வாங்க வேண்டும். பணத்தை 2 புறங்களிலும் திருப்பிப் பார்த்து நல்ல நோட்டா என்பதை உருதி செய்த பிறகு பணத்தை உள்ளே வைக்க வேண்டும்.

    மேலும் விற்பனையாகும் பணததை அவ்வப்போது எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டு பணம் வைக்கும் டிராவில் குறைந்த தொகையை வைத்து பண்டிகை காலங்களில் ஏமாற்று கும்பலிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

    இதே போல் சிலர் 100 ரூபாயை கொடுத்து விட்டு 500 ரூபாய் கொடுத்தேன் என்று ரகளை செய்வார்கள். அவர்கள் வேறு ஒருவர் கொடுத்த 500 ரூபாயை தங்களுடையது என்று ஏமாற்றி பணத்தை பெற்றுச் செல்லும் கும்பல் சுற்றித் திரிவார்கள். அவர்களிடம் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள வேண்டும்

    மேலும் கடைகளில் கூட்டம் அதிக அளவில் சேர்வதை தவிர்க்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அவற்றை விரைவில் கொடுத்து அனுப்பிவிடுங்கள். பெரிய மளிகை கடைகளில் பண்டிகை காலம் முடியும் வரை கண்காணிப்பு கேமராவை பார்வையிடுவதற்கும் கண்காணிக்கவும் ஒருவரை தனியாக நியமித்து கடைகளில் திருட்டு நடைபெறாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் கள்ள நோட்டு கும்பல்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குவது போல் வருவார்கள். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் பொருள் கொடுப்பதற்கு தாமதப்படுத்தி அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • கள்ளநோட்டுகள், ஸ்கேன் எந்திரம், கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார்.

    ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ள நோட்டு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    விருதுநகர்

    கடந்த 1994-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பசவேஸ்வர் சவுக் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி(வயது51), சிவகாசியை சேர்ந்த பாண்டியன்(60), விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்ற மகேந்திரன்(61) ஆகிய 3 பேரை நிப்பானி போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் அங்குள்ள சிக்கோடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதன்பின் 3பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    அப்போது வழக்கு விசாரணைக்கு வரும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என மாஜிஸ்தி ரேட்டு உத்தரவிட்டிருந்தார். ஆனால் 3 பேரும் கோர்ட்டின் விதிகளை பின்பற்றாமல் தலைமறை வானார்கள். கடந்த 29 ஆண்டுகளாக கர்நாடகா போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 3 பேரும் தங்கள் சொந்த மாவட்டங் களில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கர்நா டகா போலீசார் இதுகுறித்து தமிழக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    தென் மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் சிவகாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி விருதுநகரில் தலைமறைவாக இருந்த ரவி, பாண்டியன், மூவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது40). இவரிடம் ஒரு பெண் பழம் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு போல் இருந்துள்ளது. இதனால் வேறு ரூபாய் நோட்டை தருமாறு பஞ்சவர்ணம் கூறியுள்ளார்.

    உடனே அந்த பெண் முதலில் கொடுத்த 500 ரூபாயாயை வாங்கி கொண்டு வேறு ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை இரண்டும் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பழம் வாங்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (56) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள துரைச்செல்வி என்பவரின் மகள் பெற்ற தொகையிலிருந்து இந்த நோட்டை எடுத்து வந்து பழம் வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வேண்டுராயபுரத்தில் உள்ள துரைசெல்வியின் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக சுப்புதாயை போலீசார் கைது செய்தனர். துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துரைசெல்வி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சில நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

    கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.
    • 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின.

    புதுடெல்லி :

    கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், அதன் பிறகும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூ.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

    அதிகபட்சமாக, 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின. 2017-ம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ம் ஆண்டு ரூ.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016-ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதுபோல், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கைப்படி, 2021-2022 நிதிஆண்டில், வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

    2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 604 ஆகும். இது, முந்தைய நிதிஆண்டை விட 54 சதவீதம் அதிகம். அனைத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதிஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது.

    2019-2020 நிதிஆண்டில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ள நோட்டுகள் பிடிபட்டன.

    ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.

    தேவகோட்டை அருகே மதுபானக்கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியை சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருடன் வேலூர் மாவட்டம் துறைபாடியை சேர்ந்த ஜோசப் (36) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலை முடிந்ததும், குருசாமி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மது வாங்கி வர கூறினாராம்.

    பணத்தை மதுபானக்கடையில் கொடுத்த போது, அங்கு விற்பனையாளரான கோட்டைச்சாமி என்பவர் பணத்தை வாங்கி பார்த்ததும், சந்தேகமடைந்து, மதுபானக்கடை ஊழியர்கள் உதவியுடன் ஜோசப்பை பிடித்து வைத்துக்கொண்டு போலீசுக்கு தகவல் கூறினார். 

    இதையடுத்து தேவகோட்டை நகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு என்பதும், அதை மதுபானக்கடையில் மாற்ற முயன்றதும் தெரியவந்ததை தொடர்ந்து ஜோசப், குருசாமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
    ஒற்றப்பாலம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கொழிஞ்சாம்பாறை:

    பாலக்காடு வழியாக கேரளாவுக்குள் கள்ளநோட்டு கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒற்றப்பாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அப்துல் முனீருக்கு உத்தரவிட்டார்.

    போலீசார் கோதகுறுச்சியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஒற்றப்பாலம் அருகே வரோடு பகுதியை சேர்ந்த ரின்ஷாத் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். #tamilnews
    ×